search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் நிலையம்"

    ஈரோடு மாவட்ட தபால் நிலையங்களில் ஆதார் அட்டை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தபால் அதிகாரி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 45 தபால் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு கோட்ட தபால் கண்காணிப்பாளர் சுரேக் ரகுநாதன் கூறினார்.

    ஆதார் அட்டை தொடர்பாக சேவை செய்வதில் ஈரோடு மற்றும் கோவை தலைமை தபால் நிலையம், நம்பியூர், ஒலகடம், சூரம்பட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., டி.என்.பாளையம், கருங்கல் பாளையம், பவானி கோபி தெற்கு, சித்தோடு, பி.பி. அக்ரஹாரம், கரட்டடி பாளையம், கள்ளிப்பட்டி, சிவகிரி, மொடக்குறிச்சி, துடுப்பதி தபால் நிலையங்களில் இலவசமாக ஆதார் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பெருந்துறை, அம்மாபேட்டை, காவிரி ரெயில் நிலையம் தபால் நிலையம், ஊஞ்சலூர், சக்தி நகர், காஞ்சிக் கோவில், அரச்சலூர் ஈரோடு ரெயில்வே காலனி, சென்னிமலை, காசி பாளையம், கொடுமுடி, வீரப்பன் சத்திரம, விஜயமங்கலம் உள்பட 45 தபால் நிலையங்களில் கட்டணமில்லாமல் ஆதார் பதிவு செய்யலாம்.

    அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண் போன்ற திருத்தங்களை ரூ.50 செலுத்தி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. #Passport #PostOffice
    சென்னை:

    தமிழகத்தில் தலைமை தபால் நிலையங்களில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறினார்.

    தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்டு சேவை மையங்களை, மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்.

    இதில் சென்னை மண்டல அலுவலகத்தின் கீழ் 7 தலைமை தபால் நிலையங்களில் 7 புதிய சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி பி.கே.அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவதற்காக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட்டு சேவா திட்டதை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, நேர்காணலுக்கு நாள் குறித்தல் பயோமெட்ரிக் பதிவு செய்தல் மற்றும் பாஸ்போர்ட்டு வழங்குவது வரை அனைத்து செயல்முறைகளும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. தற்போது விரைவாக பாஸ்போர்ட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, எண் 1/10, ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், காஞ்சீபுரம், எண்.46, ரெயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், திருவள்ளூரில், எண். 37, ஜே.என்.சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டையில், ஆற்காடு சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், ஆரணியில், என்-2ஏ, சூரியகுளம் வடக்கு தெருவில் உள்ள தலைமை தபால் நலையம், கள்ளக்குறிச்சியில், எண்-23, காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம், தர்மபுரியில் எண்-16-ஏ, நாச்சியப்பா தெருவில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் செயல்படும்.

    இந்த மையங்களில் புதிய பாஸ்போர்ட்டு விண்ணப்பம், பழைய பாஸ்போர்ட்டு புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் அளிக்கலாம். அத்துடன் பாஸ்போர்ட்டு பெறுவதற்காக முன்அனுமதியும் பெறலாம். விண்ணப்பதாரர் புகைப்படம் எடுப்பது மற்றும் கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பாஸ்போர்ட்டு கட்டணங்களையும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும், புதுச்சேரி மற்றும் சென்னையில் சாலிக்கிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய 4 இடங்களில் பாஸ்போர்ட்டு சேவை மையமும் செயல்பட்டு வருகிறது.

    தற்போது திறக்கப்பட்ட மையங்களுடன் சேர்த்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தின் கீழ் 11 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையிலான பாஸ்போர்ட்டு சென்னை, அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. காவல் துறை சான்றிதழ் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி அல்லது சென்னையில் உள்ள பாஸ்போர்ட்டு சேவை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் 12 தபால் நிலையங்களில் விரைவில் புதிய மையங்கள் திறக்கப்படும். விண்ணப்பித்த 6-வது நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். #Passport
    சென்னை:

    பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே. அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் காவல் துறையின் சரிபார்ப்புக்காக ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ யை கடந்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதற்காக 1,700 ‘கை கணினி’ (டேப்லெட்) வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்ப்பு பணியை காவல்துறை துரிதமாக செய்தது. அதன்பின்னர் தமிழகத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 990 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 63 நாட்கள், திருச்சி புறநகர் 51 நாட்கள், அரியலூர் 48 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு திரும்பி வந்தன.

    பொதுவாக 21 நாட்களுக்கு பிறகு பரிசீலனை செய்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ரூ.50-ம், 21 நாட்களுக்கு முன்பாக பரிசீலனை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ.150 கட்டணமும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு விரைவான சேவை மூலம் 21 நாட்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் முழு தொகை மாநில அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சராசரியாக விண்ணப்பித்த 6 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் 10 சதவீதம் தமிழகத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் மையம் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.

    இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Passport
    நீலகிரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கிக்கிளை தொடங்கப்பட்டு உள்ளது. அரசு மானியங்களை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    இந்தியா அஞ்சல் துறையில் அனைத்து தபால் நிலையங்களும் கணினி மயமாக்கப்பட்டு, பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்திய அஞ்சல் துறை வங்கி களின் சேவைகளை அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிராம மக்களுக்கும் எளிதாக வழங்குவதற்காக அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற தபால் நிலையங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் துணை தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். வங்கிக்கிளையை கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி கணக்கை கணினி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் பயன்கள் குறித்த நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் வங்கி கணக்கு தொடங்கிய 200 பேரில் சிலருக்கு பணம் எடுக்கவும், செலுத்தவும் வசதியாக ‘கியூர்ஆர்’ அட்டைகள் வழங்கப்பட்டன.

    பின்னர் நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி சேரிங்கிராஸ் துணை தபால் நிலையம், மசினகுடி துணை தபால் நிலையம், மாவனல்லா, மாயாறு, சிங்காரா ஆகிய 5 தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டும் போதுமானது. புகைப்படமோ அல்லது இருப்பிட சான்றிதழோ தேவையில்லை. பணம் செலுத்தாமலேயே வங்கி கணக்கை தொடங்கலாம். இதன் மூலம் ஓய்வூதிய பலன்கள், கியாஸ் மானியம், அரசு வழங்கும் மானியங்களை பெறலாம். மொபைல் வங்கி செயலி, குறுஞ்செய்தி போன்ற வசதிகளும் உள்ளன.

    தபால்காரர்கள் உங்களது வீட்டுக்கு வரும் போது, கியூஆர் அட்டை சொருகி தங்களது கைரேகை வைத்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல தபால்காரர் மூலம் வங்கி கணக்கில் பணமும் செலுத்தலாம். இந்த பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். எதிர்காலத்தில் விவசாயத்துக்கான மானியம், மத்திய அரசின் மானியம், கடன் தள்ளுபடி போன்ற பயன்களை வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

    அனைத்து கிராமங்களிலும் துணை அஞ்சலகங்கள், கிளை தபால் நிலையங்கள் உள்ளதால் சாதாரண மக்கள் வங்கியை நாடி செல்ல வேண்டியது இல்லை. இருப்பு வைக்கும் பணத்துக்கு தினமும் 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். குடிநீர், மின்சாரம், டி.டி.எச். கட்டணம், கல்லூரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். இந்த திட்டம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊட்டி தலைமை தபால் அலுவலக அதிகாரி உமாமகேஸ்வரி, குன்னூர் தபால் அதிகாரி சுப்பிரமணி மற்றும் ரவிசந்திரன், ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

    கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா தபால் நிலையங்கள் உள்பட 35 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் கோட்ட முதுநிலை தபால்துறை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் கடந்த மாதம் 2-ந்தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா தபால் நிலையங்கள் உள்பட 35 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் பொதுமக்கள் ஆதார் விவரங்களை பதிவு செய்யவும், பதிவு செய்யப்பட்ட விவரங்களை திருத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருத்தம் செய்வதற்கு கட்டணமாக ரூ.25-ம், கருப்பு-வெள்ளை ஆதார் அட்டை நகல் எடுக்க ரூ.10-ம், கலர் ஆதார் அட்டை நகல் எடுக்க ரூ.20-ம், 18 சதவீத சரக்கு சேவை வரியுடன் செலுத்த வேண்டும். மாவட்ட மக்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி இந்த மையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை பிப்ரவரி 16-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை.

    தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. காவிரி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்தான் காரணம்.

    அதில் தங்களுக்கு பாதகமாக முடிவு அமைந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

    காவிரி தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தி கேள்விகுறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×